மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
மேட்டூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் இந்த தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,992 கனஅடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை நிரம்பிய 3 நாட்களில் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119.76 அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி நீரும் என வினாடிக்கு 12 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.