தலைமை செயலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்


தலைமை செயலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 25 Oct 2024 2:24 PM IST (Updated: 25 Oct 2024 4:12 PM IST)
t-max-icont-min-icon

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த அரசு ஊழியர்கள் சிலர், தடுமாற்றத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியதாக தெரிகிறது. மேலும் அங்கிருந்த மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்ட துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் இருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் சொல்லுமாறு அறிவுறுத்தினார். இதன்படி மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "தமிழக அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இத்திட்டத்தை, பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு 6.5 கோடியில் செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.

அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யாததால் பாடியவர்களின் குரல் கேட்கவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன்பின்னர் தேசிய கீதமும் முறையாக பாடப்பட்டது. தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டாம்" என்று தெரிவித்தார்.


Next Story