கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை அருகே உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் 9 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இதை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில் கூடாரம் அமைத்து அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியத்துக்கு வருபவர்கள் இங்கு வந்து செல்வதுண்டு.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் ரூ.17.80 கோடியில் கீழடியில் அகழாய்வு நடந்த இடத்திலேயே 5 ஆயிரத்து 914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த மாதம் 16-ந் தேதி அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, பெரியகருப்பன் ஆகியோர் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர். அன்று முதல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்களை முதலில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்து உள்ளனர். அதன்படி கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகியோர் தலைமையில் தொல்லியல் ஆய்வு மாணவர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் திறந்தவெளி அருங்காட்சியகத்தில் பணிகள் நடந்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கீழடி அருங்காட்சியத்துக்கு செல்ல வழக்கம் போல அனுமதி உண்டு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.