ஆசிரியருக்கு மாணவர்கள் காலை அமுக்கி விடும் வீடியோ வைரல்: அரசு பள்ளியில் கல்வி அதிகாரி நேரில் விசாரணை
அரசு பள்ளியில் ஆசிரியருக்கு மாணவர்கள் காலை அமுக்கி விடும் வீடியோ சமீபத்தில் வைரலானது.
சேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் ஜெயபிரகாசுக்கு மாணவர்கள், காலை அமுக்கி விடும் வீடியோ சமீபத்தில் வைரலானது.
இதையடுத்து கணித ஆசிரியர் ஜெய பிரகாசை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கணித ஆசிரியர் பணி இடைநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே நேற்று மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் நரசிம்மன் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். அவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பொதுமக்கள் ஆசிரியர் ஜெயபிரகாசுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அடிக்கடி அவருக்கு மயக்கம் ஏற்படுவதாகவும், அப்போது மாணவர்கள் அவருக்கு காலை அமுக்கி விட்டனர். இதை வீடியோவாக சக பள்ளி ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அவர் சக ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பொதுமக்களை போன்று புகார் அளித்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதுகுறித்து மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் நரசிம்மனிடம் கேட்ட போது, 'பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினோம். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை வழங்கப்படும்' என்றார்.