வேங்கைவயல் வழக்கு: விசாரணைக்கு ஏற்பு


வேங்கைவயல் வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
x
தினத்தந்தி 6 Feb 2025 8:12 PM IST (Updated: 6 Feb 2025 8:14 PM IST)
t-max-icont-min-icon

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட வழக்கு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துராஜா ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்ததில் தொடர்பு இருப்பதாக அறிவியல் பூர்வமாக ஆதாரங்களை திரட்டி, தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் மீதே குற்றம் சுமத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது எனவும், வழக்கில் புகார்தாரரான தன்னை முழுமையாக விசாரிக்கவில்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக தன்னிடம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், அந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி புகார்தாரர் கனகராஜ் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே 2 முறை வந்தது. இதில் புகார்தாரர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகையை கோர்ட்டு ஏற்கக்கூடாது என வாதிட்டனர். இதேபோல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் குமார், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவியல்பூர்வமாக ஆதாரங்களை திரட்டி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் வேங்கைவயலில் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதாக கூறப்பட்டதில், அந்த தண்ணீரை யாரும் குடிக்கவில்லை எனவும், அதனால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது எனவும், வழக்கை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். மேலும் வழக்கை மாற்றுவதற்காகவும் தனியாக மனு தாக்கல் செய்தார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் இந்த மனு மீது 3-ந் தேதி தீர்ப்பு வழங்குவதாக கடந்த 1-ந் தேதி நீதிபதி (பொறுப்பு) வசந்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து இம்மனு மீதான விசாரணையில் நீதிபதி (பொறுப்பு) வசந்தி கடந்த 3-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் குற்றப்பத்திரிகையை ஏற்று, வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், இதனை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.


Next Story