பருவமழையினை முன்னிட்டு, சென்னையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் - முருகானந்தம் ஆய்வு

பல்வேறு பணிகளை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இன்று (09.08.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமூடியகால்வாய் அமைக்கும் பணி, கால்வாய் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், குளங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுதல், புதிய குளங்களில் நீர் கொள்ளளவினை அதிகரித்தல் மற்றும் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இன்று (09.08.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீர்வளத்துறை
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தணிப்பதற்காக தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து கடல் வரை நேரடியாக ரூ. 91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமூடிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தெற்கு பக்கிங்காம் கால்வாயிலிருந்து கடல் வரை மேற்கொள்ளப்படும் நேரடி பெருமூடிய கால்வாய் அமைக்கும் பணியின் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் வெள்ள நீர் அதிகரிப்பதுடன் சதுப்பு நிலத்தின் வெள்ள அளவான (+) 3.750 மீட்டரிலிருந்து (+) 3.000 மீட்டருக்கு குறைப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், கடந்த காலங்களில் வேளச்சேரி விஜயநகர், ராம்நகர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, நாராயணபுரம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் பெய்த மழைநீரால் ஏற்படும் வெள்ளப் பாதிப்பினால் மழைநீர் வடிய குறைந்தபட்சம் 2 அல்லது 3 நாட்கள் வரை ஆகும். தற்போது இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருவதால், தென்சென்னை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு குறையும்.
இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவில் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் விரிவான மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிக்கரணை சதுப்புநிலம் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைந்துள்ள 62 குளங்களிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. இது இறுதியில் ஒக்கியம் மடுவு வழியாக பக்கிங்காம் கால்வாயில் பாய்ந்து முட்டுக்காடு ஓடை வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தற்போது இந்த ஒக்கியம் மடுவில் எந்திரங்களைப் பயன்படுத்தி ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதுடன், நகர்ப்புற வெள்ளத்தைத் தடுக்க 800 மீட்டர் நீளத்தில் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னர், பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணை அணை ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ. 57.70 கோடி மதிப்பீட்டில் மூடிய பெருவடிகால்கள் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பணி மேற்கொள்ளப்படுவதனால், பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள செட்டிநாடு என்கிளேவ், ராஜேஷ் நகர், விடுதலை நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு தவிர்க்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, பெருங்குடி மண்டலம், நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.44 கோடி மதிப்பீட்டில் இரண்டு கண் கொண்ட கூடுதல் பெருவடிகால்வாய் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு மற்றும் 2023ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் போது நாராயணபுரம் ஏரியின் வரையறுக்கப்படாத வடிகால்வாயினால் சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வெள்ளப் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுரை மற்றும் திருப்புகழ் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை இரண்டு கண் கொண்ட கூடுதல் பெருமூடு வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் முடிவுறும் தருவாயில், நாராயணபுரம், சுண்ணாம்பு குளத்தூர் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள ராம் நகர், ஶ்ரீநகர் மற்றும் எல்.ஐ.சி. நகர் பகுதிகள் வெள்ளப் பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும்.
பின்னர், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் பக்கிங்காம் கால்வாயில் சேரும் கீழ்க்கட்டளை உபரி கால்வாயில் இரண்டு பகுதிகளாக ரூ.59.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பணிகள் முடிவுறும் தருவாயில் கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூர், மடிப்பாக்கம் போன்ற அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பாதிப்பிலிருந்து தவிர்க்கப்படும். இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஆலந்தூர் மண்டலம், மணப்பாக்கம் கால்வாயில் ரூ.9.40 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர், நுழைவுவாயில் ஈர்ப்புச்சுவர் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் போரூர் ஏரியின் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, உடனடியாக வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில், முதற்கட்டமாக 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ளப்பாதிப்பை தவிர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு போரூர் ஏரியின் மேற்பகுதியில் வெள்ளப் பாதிப்புகள் குறைக்கப்பட்டது. மேலும், கீழ்ப்பகுதியில் உள்ள கணேஷ் நகர், எம்.ஜி.ஆர். நகர், ராஜலட்சுமி நகர், திருவள்ளுவர் சாலை மற்றும் மாதா நகர் ஆகிய பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகின.
இக்கால்வாயில் தடுப்புச்சுவர், நுழைவாயில் ஈர்ப்புச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியால் மதனந்தபுரம், மணப்பாக்கம் மற்றும் முகலிவாக்கம் கிராமங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படும்.
நெடுஞ்சாலைத்துறை
சோழிங்கநல்லூர் மண்டலம், மேடவாக்கம், கும்மிடியாண்டி தோப்பு சாலையில் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் ரூ.145 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையூறின்றி பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவும் உரிய காலத்தில் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-189 மற்றும் 193ல் 200 அடி ரேடியல் சாலையில் 17 கண் கொண்ட கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அடையாறு மண்டலம், டைடல் பார்க் எதிரில் மத்திய கைலாஷ் முதல் மாமல்லபுரம் வரையிலான ஓ.எம்.ஆர். சாலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணிகள் மேற்கொண்டு வருவதையொட்டி நடைபாதையின் 14 மீட்டர் அகலிருந்து 7.6 மீட்டர் அகலமாக குறைந்ததைத் தொடர்ந்து, அதன் அருகிலேயே 5 மீட்டர் வரை நடைபாலத்தினை அதிகரித்து அருகிலுள்ள தொழில் துறை நிறுவனத்தின் பகுதியில் அதன் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பணிகள் முடிந்தவுடன் அதனை அவர்களிடம் ஒப்படைத்திடவும் அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள 42 ஏக்கர் பரப்பளவிலான ராமன் தாங்கல் ஏரியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் வாயிலாக (Environmentalist Foundation of India), நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் ஆகாயத்தாமரை அகற்றுதல், பறவைகளுக்கான தீவுகள் அமைத்தல், 10,500 மரங்கள் நடுதல், சூரிய சக்தியில் இயங்கும் நீரூற்று, நடைபாதை, மின்விளக்கு வசதி, சுற்றிலும் வேலி
அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஏரி புனரமைப்பதன் மூலம் 22 சதவீத நீர் கொள்ளளவு அதிகரித்திடும். மேலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து பயனளித்திடும். இந்த குளத்தில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடவும், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அடையாறு மண்டலம், கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக 4 குளங்கள் 1,10,800 கன மீட்டர் (அ) 3.91 மில்லியன் கன அடி கொள்ளளவு தண்ணீர் தேக்கும் திறனுடன் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த 4 குளங்களில் கூடுதலாக சேர்த்து 45,760 ச.மீ. பரப்பளவில், 2,28,800 கனமீட்டர் (அ) 8.07 மில்லியன் கன அடி கொள்ளளவுத் திறனுடன் மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் கிண்டி, மடுவின்கரை, வேளச்சேரி மற்றும் ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் பெரிதும் குறையும்.
சென்னை குடிநீர் வாரியம்
முன்னதாக, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை தலைமைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாஸ்கர பாண்டியன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், துணை ஆணையர் (பணிகள்) சிவ கிருஷ்ணமூர்த்தி, தெற்கு வட்டார துணை ஆணையர் அதாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொதுப்பணித் திலகம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






