வன்னியர் உள்ஒதுக்கீடு: தமிழக அரசைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்


வன்னியர் உள்ஒதுக்கீடு: தமிழக அரசைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
x

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று (24-ம் தேதி) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

அதன்படி, வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பாமக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தால் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைபோல சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஏற்கனவே உறுதியளித்தார். அதிகாரம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாத திராவிட மாடல் திமுக அரசு. வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என முதல்வர் தற்போது சொல்கிறார்" என்று கூறினார்.


Next Story