வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி அரசு சார்பில் வருகிற 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது. முதல் 2 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
அப்போது திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"வள்ளுவ முனைதனில் வானுயர நிற்கும் பேரறிவுச் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் இளைய தலைமுறை, அய்யன் வள்ளுவர் வகுத்துள்ள தமிழ் வாழ்வியல் நெறியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறேன். வள்ளுவம் போற்றுதும். வள்ளுவம் என்பது வாழ்வியல் நெறியாக மாற வேண்டும். சமுதாயம், குரல் சமுதாயமாக மலரனும். வேற்றுமையின் வேர்களை கிள்ளி எறிய வள்ளுவ மருந்தே பொது மருந்தாக மாற வேண்டும். வாழிய குரலும், வள்ளுவன் புகழும், வாழிய வாழியவே..." என்று தெரிவித்துள்ளார்.