சி.பி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் போலீசாரின் பாதுகாப்பை மீறி ஸ்கூட்டரில் உள்ளே புகுந்து தப்பிச் சென்ற 2 பேர் யார்..?

போலீசார் பணியில் இருந்த போது பாதுகாப்பு வளையத்தை மீறி 2 பேர் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை,
நாட்டின் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் கொடிசியாவில் தொழில்துறையினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு ரெட்பீல்டு பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்தார். இதையடுத்து அவர் மாலை 4 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதற்காக கோவை மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்காக அந்த பகுதியில் இரும்புத்தடுப்புகள் மற்றும் கயிறு கட்டி இருந்தனர்.
இந்த நிலையில் பிற்பகல் 2.20 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகம் அருகே 5 முக்கு சந்திப்பு பகுதியில் இருந்து ஒருவழிப் பாதையான மணிக்கூண்டை நோக்கி 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் வேகமாக தப்பிச் சென்றனர்.
துணை ஜனாதிபதி வருகைக்காக தடுப்புகள் அமைத்து போலீசார் பணியில் இருந்த போது பாதுகாப்பு வளையத்தை மீறி 2 பேர் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அறிந்த பா.ஜனதா நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள், போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்றுக்கூறி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து போலீசாரின் பாதுகாப்பு வளையத்தை மீறி ஸ்கூட்டரில் உள்ளே புகுந்து தப்பிச் சென்ற 2 பேர் யார்? என்பது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கோவை ஆசாத் நகரை சேர்ந்த ஆசிக் (24), அனிஷ் ரகுமான் (25) என்பதும், குடிபோதையில் அந்த வழியாக சென்றதும் தெரியவந்தது. அத்துடன் ஸ்கூட்டரை ஓட்டிய ஆசிக் போலீஸ் தன்னை பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் அங்கு நின்றிருந்த சில வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
அத்துடன் போலீசாரின் எச்சரிக்கையை மீறி, அதிவேகமாகவும், அலட்சியமாகவும், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆசிக்கை கைது செய்தனர்.






