இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு


இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு
x
தினத்தந்தி 4 Dec 2024 1:05 PM IST (Updated: 4 Dec 2024 3:12 PM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி திண்டுகல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான அந்த மனுவில், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சூர்யமூர்த்தியின் மனு தொடர்பாக அ.தி.மு.க.விற்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை பெற்றுள்ளோம் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதேநேரம், தங்கள் தரப்பையும் கேட்ட பின்னரே முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் கோரிக்கை மனுவை தாக்கல் செய்து இருந்தது. அதையும் விசாரித்த ஐகோர்ட்டு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அ.தி.மு.க.வுக்கு சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற மனுவின் மீது 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story