த.வெ.க. தலைவர் விஜய், கவர்னரை சந்தித்தது குறித்து வன்னி அரசு விமர்சனம்
விஜய், கவர்னரை சந்தித்ததற்கு பெயர் தான் எலைட் அரசியல் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த சந்திப்பின்போது அளிக்கப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கவர்னரை சந்தித்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கவர்னரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பா.ஜ.க. அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது த.வெ.க. தலைவர் நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது.
கவர்னர் ரவி அவர்களை, விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார்.
இதற்கு பெயர் தான் எலைட் அரசியல்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.