பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீர் சாவு - சக திருநங்கைகள் 2 பேர் கைது


பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீர் சாவு - சக திருநங்கைகள் 2 பேர் கைது
x

ஆலங்குளம் அருகே பெண்ணாக மாற முயன்ற திருநங்கை திடீரென்று உயிரிழந்தார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பரும்பு மாடி தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. திருநங்கையான இவருடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் கடந்த 2 வாரங்களாக தங்கி இருந்தார். இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மகாலட்சுமியின் வீட்டில் சைலு திடீரென்று மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அவரை மகாலட்சுமி உள்ளிட்ட திருநங்கைகள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சைலு இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சைலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சைலு பெண்ணாக மாறுவதற்காக தனது மர்ம உறுப்பை தானே அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்தபோது இறந்து விட்டதாக திருநங்கைகள் தெரிவித்தனர். எனினும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சைலு பெண்ணாக மாறுவதற்காக அவரது மர்ம உறுப்பை மகாலட்சுமியும், மற்றொரு திருநங்கையான மதுமிதா என்பவரும் சேர்ந்து கத்தியால் அறுத்ததும், இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில் அவர் இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மகாலட்சுமி, மதுமிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும், ஏற்கனவே பெண்ணாக மாற முயன்ற பலருக்கு மர்ம உறுப்பை அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story