குளிர்காய நெருப்பு மூட்டியபோது பரிதாபம்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு


குளிர்காய நெருப்பு மூட்டியபோது பரிதாபம்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு
x
தினத்தந்தி 8 Jan 2025 3:25 AM IST (Updated: 8 Jan 2025 1:09 PM IST)
t-max-icont-min-icon

எதிர்பாராதவிதமாக மூதாட்டி அணிந்திருந்த துணியில் தீப்பற்றியது.

தேனி,

தேனி அருகே வடபுதுப்பட்டி பகுதியில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. அங்கு மனநலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 60 பேர் உள்ளனர். தேனி பகுதியில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சம்பவத்தன்று பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்தவர்கள் காப்பகம் முன்பு காய்ந்த இலைகளை குவித்து நெருப்பு வைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அதேபோல் அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற மூதாட்டியான அக்கம்மாள் (வயது 64) என்பவரும் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது, அக்கம்மாள்அணிந்திருந்த துணியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இந்த தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள், அக்கம்மாள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அக்கம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து விடுதி காப்பாளர் சிசிலி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story