3 நாட்களுக்குப் பின் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது
இன்று முதல் புதுச்சேரி -கடலூர் சாலையில் மீண்டும் நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்,
'பெஞ்ஜல்' புயல் மழை மற்றும் வீடூர், சாத்தனூர் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் புதுவை நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன்படி புதுச்சேரி - கடலூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக புதுவையில் இருந்து பாகூர் வழியாக விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் கடலூருக்கு வாகனங்கள் சென்றன. அதேபோல் கடலூரில் இருந்து புதுவை வந்த வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க பணிகள் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே நேற்றும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல் புதுச்சேரி -கடலூர் சாலையில் மீண்டும் நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் சீரமைக்கப்பட்டதால் கடந்த 4-ம் தேதிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ போன்ற இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதில் பிரச்சினை ஏதும் இல்லாதபட்சத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.