தவெக மாநாட்டினால் டன் கணக்கில் குப்பைகள்; உடைந்து கிடக்கும் நாற்காலிகள்...


தவெக மாநாட்டினால் டன் கணக்கில் குப்பைகள்; உடைந்து கிடக்கும் நாற்காலிகள்...
x

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் செல்போன் பயன்பாடு அதிகரித்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாடு மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் வகைகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகள், உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மாநாடு முடிந்ததும் திடலை விட்டு நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவரும் கலைந்து சென்றதும், மாநாட்டுத்திடல் முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகளாக பரவிக்கிடந்தன.

85 ஏக்கர் பரப்பளவுள்ள மாநாட்டுத்திடல் மட்டுமின்றி திடலுக்கு வெளியே அதன் சுற்றுப்புற பகுதியிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக்கிடந்தன. தொண்டர்கள் விட்டுச்சென்ற கட்சி கொடிகள், துண்டுகள், பேட்ஜ்கள் மற்றும் காலி குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், உணவுப்பொட்டல கழிவுகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள் என சுமார் 3 டன் அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன.

அதுமட்டுமின்றி விஜய்யை பார்க்க முண்டியடித்துக்கொண்டு வந்தவர்களை போலீசாரும், பவுன்சர்களும் தடுத்ததால் ஆத்திரத்தில் அவர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளை உடைத்தெறிந்தனர். அந்த வகையில் உடைந்துபோன நாற்காலிகள், குப்பையோடு குப்பையாகவும் கிடந்தன. இவ்வாறு குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாநாட்டு திடல் மற்றும் திடலுக்கு வெளியே சுற்றுப்புற பகுதியில் கிடந்த குப்பைகளை மாநாட்டுக்குழுவினர், கூலித்தொழிலாளர்கள் மூலமாக பெரிய, பெரிய சாக்குப்பைகளில் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் செல்போன் பயன்பாடும் அதிகரித்தது. இதனால் இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவரையொருவர் செல்போன் மூலம் தொடர்புகொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பலர், தாங்கள் வந்த வாகனங்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்க முடியாமல் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேடி, தேடி அலைந்தனர்.


Next Story