இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
x
தினத்தந்தி 18 Dec 2024 11:15 AM IST (Updated: 18 Dec 2024 9:05 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 18 Dec 2024 4:14 PM IST

    கூடங்குளம் அருகே கல்குவாரியில் விபத்து

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கன் துறையில் உள்ள கல்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர், வட்டாட்சியர், காவல் துறையினர் விரைந்துள்ளனர். மண்சரிவில் 3 பேர் சிக்கி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

  • 18 Dec 2024 4:05 PM IST

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம் என தகவல் வெளியாகி உள்ளது. கூட்டுக்குழுவில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • 18 Dec 2024 4:00 PM IST

    புதுச்சேரி கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக, கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுற்றுலாப் பயணிகளிடம் அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றி வருகின்றனர்.

  • 18 Dec 2024 3:46 PM IST

    புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயமாகிறது. விதியை மீறினால் ரூ.1000 அபராதம், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 18 Dec 2024 3:44 PM IST

    வேலூரில் இருசக்கர வாகனம் மீது லாரியின் சக்கரம் உரசி 66 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் கணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • 18 Dec 2024 3:42 PM IST

    பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான கனவுரியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் மற்றும் பிற விவசாயிகள், சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவுடன் பேச மறுத்துவிட்டதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

  • 18 Dec 2024 3:41 PM IST

    கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் தேனி மாவட்ட காவல் துறையால் நேற்று கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  • 18 Dec 2024 3:36 PM IST

    ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ ஆய்வு நூலுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • 18 Dec 2024 3:32 PM IST

    வங்காளதேசத்தில் ஆயுத கடத்தல் முயற்சி வழக்கில் உல்பா தலைவர் பரேஷ் பருவாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மந்திரி லுத்புஸ்ஸமான் பாபர் மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

  • 18 Dec 2024 3:30 PM IST

    சென்னையை அடுத்த ஆவடி அருகே ஏரியில் கட்டப்பட்டுள்ளதாக 600 வீடுகளுக்கு வருவாய், நீர்வளத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story