இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 March 2025 7:08 AM
சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 17 March 2025 6:22 AM
சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
- 17 March 2025 6:00 AM
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அவையில் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளார். எண்ணி கணிக்க கூடிய முறையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த அவர் கோருகிறார்.
- 17 March 2025 5:32 AM
அ.தி.மு.க. கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவையாக உள்ளன.
- 17 March 2025 5:31 AM
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன் இன்று அவையில் பேசும்போது, ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரையில் நான்கு வழிச்சாலை விரிவுப்படுத்தப்பட்டன. கோபி நகரத்திற்குள் நெரிசல் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தின் அடிப்படையில் எங்களது ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. உறுப்பினரும் கோரிக்கை வைத்திருக்கிறார். இதுதொடர்பாக மானிய கோரிக்கையின்போது அவருக்கு பிடித்த மாதிரி பதில் சொல்கிறேன் என்று கூறினார்.
- 17 March 2025 5:01 AM
சட்டசபை வளாகத்தில் உள்ள அறையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையனை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், அவருடன் தங்கமணி, வேலுமணி, கே.பி. முனுசாமி ஆகியோர் சமரசம் பேச முயற்சி செய்து வருகின்றனர்.
- 17 March 2025 4:53 AM
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் முன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், நாங்கள் போராட்டத்திற்கு செல்ல வேண்டும். எங்களை போக விடுங்கள் என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிய நிலையில், அவரை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் போலீசார் கைது செய்தனர்.
- 17 March 2025 4:49 AM
டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் இன்று காலை முதல் இந்தியாவுக்கு வரிசையாக வந்து சேர்ந்துள்ளனர்.
- 17 March 2025 4:43 AM
ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட இதுவரை 53 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஏமனில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் கூறியுள்ளார். ஏழ்மையான அரபு நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஏமனில், இந்த தாக்குதலால் மக்கள் சமூகத்திற்கு பேராபத்து ஏற்படும் சூழல் உள்ளது என எச்சரித்து உள்ளார்.
- 17 March 2025 4:14 AM
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.