இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Jan 2025 2:31 PM IST
ஊழல் வழக்கில் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் கலிதா ஜியாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
- 15 Jan 2025 2:07 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்; கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்
டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் நிறுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
- 15 Jan 2025 1:00 PM IST
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3 சுற்றுகள் முடிவில் வீரர்கள் 14 பேர் காயம் அடைந்து உள்ளனர். 3 சுற்றுகள் முடிவில் இறுதி சுற்றுக்கு 11 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
- 15 Jan 2025 12:27 PM IST
சென்னை ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் களிக்குன்றம் சாலையிலுள்ள தேநீர் கடைக்கு சென்றபோது பாலியல் தொல்லை ஏற்பட்டு உள்ளது என போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர் என தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தொடக்கத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்து பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று பாலியல் தொல்லை அளித்தது. இந்த சூழலில், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள கல்வி நிலையங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் 2-வது சம்பவம் இதுவாகும்.
- 15 Jan 2025 12:12 PM IST
போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஷீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 15 Jan 2025 11:36 AM IST
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Jan 2025 10:54 AM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 15 Jan 2025 10:48 AM IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் என மொத்தம் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர். 12 ஆயிரம் கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீயின் தீவிரம் இன்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 15 Jan 2025 10:35 AM IST
ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுகள் நடைபெறும் மறுதேதியை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற இருந்த 17 பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.