இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2025 9:17 AM IST
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - போக்குவரத்து மாற்றம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ், வெள்ளைக்கல் வழியாக செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13 Jan 2025 9:08 AM IST
சிதம்பரம் நடராஜருக்கு சீர்வரிசையுடன் படையலிட்ட மீனவர்கள்
பருவதராஜா குல மீனவர் சங்கத்தினர் நடராஜரை மருமகனாக கருதி மேளதாளங்கள் முழங்க மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று தேரில் எழுந்தருளிய நடராஜருக்கு படையலிட்டனர்.
இதே போல மீனவர் குலத்தில் பிறந்த மகளாக கருதப்படும் சிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை எடுத்துச் சென்று கொடுத்து வழிபட்டனர்.
- 13 Jan 2025 9:05 AM IST
உ.பி. : மகா கும்பமேளா தொடங்கியது - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
கும்பமேளா நடைபெறும் நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதை இந்துக்கள் தங்களது வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறு நீராடுவதால் இப்பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ளவும், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள், துறவிகள், அகோரிகள் மற்றும் பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
- 13 Jan 2025 9:02 AM IST
தென் மாவட்ட பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் (06151) இயக்கப்படுகிறது.
இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், திருவனந்தபுரத்துக்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலானது விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்கிறது.
- 13 Jan 2025 8:59 AM IST
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13 Jan 2025 8:56 AM IST
நாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அப்போது அய்யப்பனுக்கு பாரம்பரிய வழக்கப்படி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இந்த திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை நேற்று பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. முன்னதாக சாஸ்தா கோவிலில் மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் திருவாபரணங்கள் 3 சந்தன பேழைகளில் எடுக்கப்பட்டு பந்தளம் ராஜ குடும்ப மூத்த பிரதிநிதி திருக்கோட்ட நாள் ராஜ ராஜ வர்மா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டது.
- 13 Jan 2025 8:53 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, லாஞ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, இந்த காட்டுத்தீயில் 16 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
- 13 Jan 2025 8:50 AM IST
சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு
போகிப் பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, போகி பண்டிகை. பனிமூட்டம், விமானங்கள், ரத்துடெல்லி, பெங்களூரில் இருந்து, இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- 13 Jan 2025 8:47 AM IST
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.
- 13 Jan 2025 8:44 AM IST
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்
தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.