இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Jan 2025 8:32 PM IST
விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, விழுப்புரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்-06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9 Jan 2025 7:17 PM IST
கடலூர் மாவட்டம் வடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 9 Jan 2025 6:19 PM IST
யுஜிசி விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? -மு.க ஸ்டாலின்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்!
இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?
தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் #UGC_Draft_Regulations!
இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்!” இவ்வாறு கூறியுள்ளார்.
- 9 Jan 2025 6:13 PM IST
திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி நெரிசல் சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் எனவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
- 9 Jan 2025 4:31 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
ஜனநாயக கட்சி சார்பில் முதலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பிரசாரத்தில் தடுமாறியதால் ஜோ பைடன் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்துதான் கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கினார். எனினும் அவர் படு தோல்வி அடைந்தார். இதனை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், நான் போட்டியிட்டு இருந்தால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பேன் என்று கூறியுள்ளார்.
- 9 Jan 2025 3:45 PM IST
தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, சீமான் கொச்சைப்படுத்தி பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
- 9 Jan 2025 3:27 PM IST
குஜராத்: அகமதாபாத் மலர் கண்காட்சியில் 10.84 மீட்டர் உயரத்திற்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பூங்கொத்து (Bouquet) கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 7.7 மீட்டர் அளவில் அமைக்கப்பட்ட பூங்கொத்தின் சாதனை முறியடித்துள்ளது.
- 9 Jan 2025 3:25 PM IST
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, நியாயவிலைக் கடைகள் நாளை (ஜன.10) செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
- 9 Jan 2025 3:14 PM IST
திருப்பதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.