திருப்பூர்: வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் நிறுவன உரிமையாளரிடம் ரூ.7.47 லட்சம் மோசடி
வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்வதுபோல் குறுஞ்செய்தி அனுப்பி, நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.7.47 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வருபவர் தங்கராஜ். இவரது செல்போனுக்கு கடந்த 8-ந்தேதி, ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணில் தங்கராஜ் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ, பெயர் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த குறுஞ்செய்தியில், உங்களது வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்வதற்கு இன்றுதான் கடைசி நாள் எனவும், அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் கூறி, கீழே உள்ள லிங்க் மூலம் விவரங்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வங்கியில் இருந்துதான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி வாட்ஸ்அப்பில் வந்த லிங்க் உள்ளே சென்று, தனது பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை தங்கராஜ் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கிலிருந்து ஆறு பரிவர்த்தனைகளில் 7.47 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோதுதான் இது ஒரு மோசடி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கி அதிகாரிகள் பிளாக் செய்துள்ளனர். இதையடுத்து, இது குறித்து திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தங்கராஜ் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.