மொழிக் கொள்கையில் உறுதியை காட்ட'ரூ' போடத் தேவையில்லை: ராமதாஸ் விமர்சனம்

தமிழை பயிற்றுமொழியாக்க நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத் தான் நிதிநிலை அறிக்கைக்கான இலட்சினையில் 'ரூ' அடையாளத்தை வைத்திருந்தோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தமிழை இந்த அரசு தேடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அணுகுமுறையை வைத்துக் கொண்டு அன்னைத் தமிழுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது.
ஆணிவேரில் அமிலத்தை ஊற்றி விட்டு, துளிருக்கு குடை பிடிக்கும் வேலையைத் தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. அன்னைத் தமிழை வளர்ப்பதற்கோ, மொழிக் கொள்கையில் உறுதியைக் காட்டுவதற்கோ 'ரூ' போடத் தேவையில்லை. மாறாக அன்னைத் தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதுமானது. அதை செய்யாமல் ரூ போடுவதால் தமிழ் வளர்ந்துவிடாது.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழ் படிக்காமலும், தமிழில் படிக்காமலும் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை நிலவுகிறது. இந்த அவலத்தைத் துடைத்தெறியாமல் தமிழை வளர்ப்பதாகக் கூறுவதெல்லாம் நாடகம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழைக் கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையையும் இன்றைய அரசு மேற்கொள்ளவில்லை. மொழி விஷயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டுவது அரசியல்; ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தான் தீர்வு என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சி அரசியலைத் தெரிந்தே செய்தால் அதைக் கைவிட்டு ஆக்கப்பூர்வ அரசியலுக்கு மாற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும். பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழைப் பயிற்றுமொழியாக்க நடப்புச் சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.