500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் கோரியது போக்குவரத்துத்துறை
500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பஸ்களை இயக்கும் வகையில் ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சுமார் ரூ.7,492 கோடி மதிப்பில் 5 கட்டமாக பல்வேறு போக்குவரத்து கழக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் ரூ.22½ கோடியில் வாங்கப்பட்டுள்ள 25 தாழ்தள பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரியுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று இரு வகையாக பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பஸ்களை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை நகரங்களிலும் மின்சார பஸ்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.