ஜாமின் கையெழுத்து போட்டதால் வந்த துயரம்: மனைவியிடம் வீடியோ கால் பேசியபடி தூய்மை பணியாளர் தற்கொலை

கோப்புப்படம்
மனைவியிடம் வீடியோ கால் பேசியபடி தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்ட சோகம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் தேவராஜன் (33 வயது). இவர் பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. ஜான் தேவராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பருக்கு ஜாமின் கையெழுத்திட்டு ரூ.2 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.
இதற்கிடையே கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால், தேவராஜனின் வங்கிக்கணக்கில் இருந்து தவணைத் தொகை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த தேவராஜன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அவர் தனது மனைவி சுப்புலட்சுமி வெளியில் சென்றிருந்த நேரத்தில், அவரது செல்போனுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.
மனைவியிடம் வீடியோ கால் பேசியபடியே ஜான் தேவராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.