"8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல்.." - அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பு என்ற சதியை முறியடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி,வின்செண்ட் எம்.பி. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். வக்கீல் இன்பதுரை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். தவெக பொதுச்செயலாளர் எஸ்.ஆனந்த், திராவிட கழக தலைவர் வீரமணி சுமார் 53 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் பலம் குறைக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்குமேல் தொங்கி கொண்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கும். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2026-ம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் குறைக்கப்படலாம். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும்.
நாடாளுமன்ற தொகுதிகளை உயர்த்தினால் அதன் எண்ணிக்கை 848ஆக உயர்த்தப்படக்கூடும். தற்போதைய மக்கள் தொகைப்படி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு 22க்கு பதிலாக 10 தான் கிடைக்கும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அபாயகரமான செயல். தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிகை உயர்த்தப்பட்டால், தற்போது இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.
கட்சி எல்லைகளை கடந்து தமிழக நலனுக்காக அனைத்து தலைவர்களும் இணைந்து எதிர்க்க வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனைபோல் அமையும். சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இந்திய அரசியலமைப்பில் தமிழ்நாட்டில் குரல் ஒடுக்கப்படும். தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானது இல்லை. அதே நேரத்தில் 50 ஆண்டுகளாக சமூக - பொருளாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது. தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையையும் அது சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதனைத்தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தென் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய `கூட்டு நடவடிக்கை குழு' ஒன்றை அமைத்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.