கணவன்-மனைவி தகராறை விலக்க சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

ராமமூர்த்திக்கும், பொன்னரசிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (44 வயது). தொழிலாளியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தாயி (85 வயது). இவருடைய சகோதரியின் மகள் பொன்னரசியை ராமமூர்த்தி திருமணம் செய்துள்ளார்.
ராமமூர்த்திக்கும், பொன்னரசிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முத்தாயி அங்கு சென்று இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி அருகில் கிடந்த கட்டையை எடுத்து முத்தாயி தலையில் அடித்தார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த முத்தாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழத்தூவல் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்தாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






