குடிநீரில் கழிவுநீர் கலந்ததா..? - ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் - அமைச்சர் தகவல்
பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, பேதி பாதிப்பு ஏற்பட்டது. 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து, கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் பல்லாவரம் மலைமேடு பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
தாம்பரம் மாநகராட்சியின் 13-வது வார்டு பகுதியில் வரும் இந்த இடத்தில், பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "குடிநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படுகிறது. 2 பேர் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். பல்லாவரத்தில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். குடிநீர் மாதிரி சோதனை தொடர்பான முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும். ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும். ஆய்வு மாதிரிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி உள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். பதற்றமான செய்திகளை பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. உட்கொண்ட உணவில் ஏதேனும் பிரச்சினையா என விசாரணை நடத்தி வருகிறோம். குடிநீரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும் . இன்னும் ஒரு மணி நேரத்தில் என்ன காரணம் என்பது தெரிந்துவிடும் . சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மழைக்காலம் என்பதால் தினமும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்திருந்தார்.