தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவதுதான் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியின் நோக்கம் - வானதி சீனிவாசன்

கோப்புப்படம்
சட்டசபையில் சபாநாயகரின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை,
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. ஜனநாயக ரீதியில் இயங்கும் ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார். பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது.
நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும். நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.
தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவதுதான். 2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.
சட்டசபையில் சபாநாயகரின் செயல்பாடு திருப்தியாக இல்லை. நான் பேசும்போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும்போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.