பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கோப்புப்படம்
அரசு பள்ளி விழாவில் பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவி ஒருவர் தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடக்க முயன்றதாக, குழந்தைகளுக்கான உதவி தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
இந்த புகாரை நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை நேற்று கைது செய்தனர்.
முன்னதாக அந்த மாணவி அளித்த புகாரில், "நான் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஞானபழனி (வயது 56) என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பள்ளி விழாவில் தமிழ் ஆசிரியர் ஞானபழனி, தன்னை தவறான கண்ணோட்டத்தில் தொட்டார். மேலும் அந்த விழாவில், நான் டாக்டர் உடை அணிந்து பங்கேற்றேன். அப்போது, எனது கையைப்பிடித்து இழுத்த ஆசிரியர், தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.