கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய ஆசிரியை கைது
![கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய ஆசிரியை கைது கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய ஆசிரியை கைது](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38052303-chennai-11.webp)
கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீலை செருப்பால் தாக்கிய ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் விமல் (வயது 45). இவர் தேவகோட்டையில் உள்ள பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக விமல், காரைக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விமலுக்காக பெண் வக்கீல் ஒருவர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வழக்கை நடத்துவதிலும் அதற்கான கட்டணத்தை பெறுவதிலும் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விமலின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி பெண் வக்கீல் வழக்கை நடத்த மறுத்துவிட்டாராம். இந்தநிலையில் நேற்று காரைக்குடி கோர்ட்டு வளாகத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் விமல், பெண் வக்கீலிடம் வழக்கை நீங்கள் ஒழுங்காக நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த கட்டணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த விமல், கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை சரமாரியாக செருப்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் விமலை காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்தனர்.