இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி: கவிஞர் வைரமுத்து

இந்திய நாகரிகத்துக்கு தமிழர் முன்னோடி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தின் இந்த தொன்மை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று உள்ளன. பல்வேறு தரப்பினரும் இந்த பெருமையை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் இரும்பு அறிமுகம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
இரும்பின் தொழில்நுட்பம் 5,300 ஆண்டுகட்கு முன்பே தமிழ்மண்ணில் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்ற பிரகடனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டபோது அவர் குரலிலும் முகத்திலும் தொனித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பெருமிதம் அல்லவா?. உலக ஆய்வகங்களின் கதிரியக்கப் பகுப்பாய்வுக்குப் பிறகு இந்தத் தொன்மை உண்மையென்று உணர்த்தப்பெற்றுள்ளது. தீ இரும்பு சக்கரம் என்ற கண்டுபிடிப்புகளே மனிதகுல வரலாற்றை வளைத்துத் திருப்பியவை. இதில் இரும்பின் இடம் உறுதியானது.
திருவள்ளுவர் இரும்பைப் பொன் என்று சுட்டுகிறார் "தூண்டில் பொன் மீன்விழுங்கி யற்று" என்கிறார். இந்தப் பெருமை இந்திய நாகரிகத்துக்குத் தமிழர் முன்னோடி என்பதை உறுதிசெய்யும். முதல்-அமைச்சருக்கும் இதன் பின்புலத்திலிருந்த அறிவுப்புலத்தார்க்கும் நல்வணக்கம் செலுத்தி நன்றி சொல்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.