தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்-அமைச்சர் - எல்.முருகன் கேள்வி


தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்-அமைச்சர் - எல்.முருகன் கேள்வி
x

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்திற்கு முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துகளை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின. மத்திய அரசு கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?

தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா? இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துகளை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா?

நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ''இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்'' என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும், மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.

கவர்னர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? கவர்னருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வதுதான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வதுதான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதே போல் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"நீங்கள் பங்கேற்கும் விழாவில் நமது தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக் கூட உறுதிசெய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்-அமைச்சராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? இதுதான் நீங்கள் தமிழ் மொழியை கட்டிக் காக்கும் லட்சணமா?

தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும்போது, செய்த தவறை மறைக்க "Technical Fault" என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்? கவர்னர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக கவர்னரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா?"

இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.


Next Story