தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் பதில்


தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் பதில்
x
தினத்தந்தி 18 Oct 2024 8:05 PM IST (Updated: 18 Oct 2024 8:31 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.என்.ரவி, கவர்னர் பதவி வகிக்க தகுதியற்றவர் என முதல்-அமைச்சர் விமர்சித்து இருந்தார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கவர்னரை முதல்-அமைச்சர் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆர்.என்.ரவி, கவர்னர் பதவி வகிக்க தகுதியற்றவர் என முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்து இருந்தது. அதில், தவறு குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றும், நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ இதில் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அசாதாரண சூழலை ஏற்படுத்தியதற்காக கவர்னரிடம் மன்னிப்பு கேட்டு கேட்டுக்கொள்கிறோம் என்று டிடி தமிழ் தொலைக்காட்சியம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டு பொய்யானது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்-அமைச்சர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அசாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுகாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதல்-அமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்-அமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story