தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.09.2025) நெடுஞ்சாலைத் துறை சார்பில், சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தொடங்கி வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார்.

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் நிதி கூறுகளின் கீழ், நெடுஞ்சாலைத்துறையின் திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக 29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்தப் புதிய கலைஞர் நூற்றாண்டு கட்டிடம், 5546.50 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் இப்புதிய கட்டடத்தில் இயங்கும்.

2023-24 ஆம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கையில், சாலை உட்கட்டமைப்பு போன்ற பெரிய பணிகளை செயல்படுத்துவதில் கால தாமதங்களை தவிர்த்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செயல்படுத்த, துரிதமாக முடிவுகள் உடனுக்குடன் எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று முடிவுகளை கால தாமதமின்றி எடுக்கும் அதிகாரம் படைத்த ஒரு அமைப்பாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புத்துயிர் ஊட்டப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த அமைப்பானது, பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் பணிகளை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆறுவழிச்சாலைகள் / அதிவேக விரைவுச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் சாலைப் பணிகளை செயல்படுத்தவும், தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தும் நோக்குடனும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் எனும் புதிய ஆணையம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டு, அதன் இலச்சினையும் வெளியிடப்பட்டது.

இந்தப் புதிய ஆணையம், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உயர்தரக் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட காலம் மற்றும் மதிப்பீட்டில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன்மூலம் சாலை பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதுடன், பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை மேம்பாடும் ஏற்படும்.

அத்துடன் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலை வலையமைப்புடன் இணைக்கப்படுவதோடு, பொதுமக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் இடங்களை அடைய உதவுவதுடன், சாலை அணுகல் வசதியையும் பெருக்கி, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த புதிய நெடுஞ்சாலை ஆணையம் கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தில் செயல்படும்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story