இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு: மு.க.ஸ்டாலின் பெருமிதம்


இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x
தினத்தந்தி 28 March 2025 4:52 AM (Updated: 28 March 2025 6:14 AM)
t-max-icont-min-icon

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் இலக்கு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. தனியார் ஓட்டலில் நடைபெற்ற சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது; தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.

கோவை, திருச்சி, ஒசூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன; கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு மின்சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 12.11 சதவீதம் பங்களிப்பு செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 சதவீதத்துக்கும் மேல் பொருளாதார வளர்ச்சி அடைந்து, இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

2030-ம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறோம். நம் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் என அனைவருக்குமான வளர்ச்சி.

தமிழ்நாடு - சிஐஐ இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவேன். சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3-வது திட்டம் தயாராகி வருகிறது. பசுமைப் பொருளாதார துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தல், நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம். தொழில்துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story