காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழகம் முன்னோடி: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. நீண்ட கடற்கரையை பாதுகாக்க தமிழ்நாடு நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை 8.3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்கப்படுகின்றன. ரூ.500 கோடியில் ஊரகப் பகுதியில் 5,000 நீர்பாசனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் 'மஞ்சப்பை' திட்டத்தால் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே 3-வது இடத்தில் உள்ளது. நீரேற்று நிலையங்களை மேம்படுத்த திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெள்ள அபாயங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.