ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த 50 சதவீத செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த 50 சதவீத செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

கோப்புப்படம் 

ரெயில் திட்டங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 9 புதிய ரெயில் பாதைத் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில், அவற்றின் மொத்த மதிப்பில் 50 சதவீதத்தை அம்மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-மந்திரி சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். இதனால், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் ரெயில் திட்டப்பணிகள் முன்கூட்டியே நிறைவேற்றி முடிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதேபோன்ற முன்முயற்சிகளை மேற்கொள்ள தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவையில் அம்மாநிலத்தின் 2025&26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய முதல்-மந்திரி சித்தராமய்யா, கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டங்களில் 9 திட்டங்களின் மதிப்பில் 50 சதவீதத்தை கர்நாடக மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.16,235 கோடி என்றும், அதில் 60 சதவீத தொகையான ரூ.9,847 கோடியை கர்நாடகம் வழங்கும்; 7 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதற்கான செலவு முழுவதையும் தமது அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டிலும் ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த, அவற்றின் திட்டச் செலவை மத்திய அரசுடன் தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கொள்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆளும் அரசு ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டச் செலவை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகின்றன. தமிழகத்தில் ரெயில் பாதைத் திட்டங்கள் மிகவும் மந்தமாக நடைபெறுவதற்கு இதுதான் காரணம் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் ரெயில்வே துறை மந்திரிகளாக இருந்த போதுதான் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்களின் காலத்தில் தமிழகத்திற்கான ரெயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 1990களிலும், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் அறிவிக்கப்பட்ட பல புதிய ரெயில் பாதைகள் இன்னும் செயல்படுத்தி முடிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 10 புதிய ரெயில் பாதை திட்டங்கள், 9 இரட்டை பாதை திட்டங்கள், 3 அகலப்பாதை திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. எனினும், புதிய பாதை திட்டங்களில் வெறும் 2.75 சதவீத பணிகளும், இரட்டைப் பாதை திட்டங்களில் வெறும் 3.82 சதவீத பணிகளும் மட்டும்தான் இதுவரை முடிவடைந்துள்ளன.

2025&26ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ரெயில் துறைக்கு மொத்தம் ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், ரெயில் பாதை திட்டங்களுக்கு வெறும் ரூ.1,536 கோடி மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது விலைவாசி அதிகரிப்பால் திட்டச் செலவில் ஏற்படும் உயர்வை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல. இதே நிலை நீடித்தால் இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் கூட தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரெயில் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பே கிடையாது.

தமிழ்நாட்டில் ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு தடையாக உள்ள இன்னொரு சிக்கல் நிலங்களை கையகப்படுத்துவது ஆகும். தமிழக ரெயில் திட்டங்களுக்கு 3,389 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், 866 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இன்னும் 74 சதவீதம், அதாவது 2,523 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தித் தர வேண்டியுள்ளது. தருமபுரி & மொரப்பூர், தஞ்சாவூர் & பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை & மன்னார்குடி, அத்திப்பட்டு & புத்தூர் ஆகிய புதிய பாதைகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. திண்டிவனம் & திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு இன்னும் 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்படவில்லை. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டுக்கான புதிய ரெயில் பாதை திட்டங்கள் அனைத்தும் கனவுத் திட்டங்களாகவே நீடித்துக் கொண்டிருக்கும்.

தமிழ்நாட்டிற்கான ரெயில்த் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுப்பதுடன், முதன்மையான சில திட்டங்களுக்கான செலவையும் பகிர்ந்து கொண்டால், ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்க முடியும். நிலுவையில் உள்ள ரெயில் பாதை விரைவாக செயல்படுத்தி முடிக்கப்பட்டால், அதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் வளர்ச்சியின் மதிப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழக அரசு செய்யும் முதலீடு ஒரு பொருட்டாகவே இருக்காது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவு இலக்கை 2030-ம் ஆண்டுக்குள் இல்லாவிட்டாலும், அடுத்த சில ஆண்டுகளிலாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு இத்தகைய நடவடிக்கைகள் தேவையாகும்.

கர்நாடகம் மட்டுமின்றி, கேரளமும் பல ரெயில் திட்டங்களுக்கான செலவுகளை ரெயில்வே துறையுடன் பகிர்ந்து கொள்கிறது. இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, முதன்மையான ரெயில் திட்டங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம் தமிழக ரெயில் திட்டங்களை விரைவுப்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story