தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்


தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு: டிடிவி தினகரன்  கண்டனம்
x
தினத்தந்தி 12 Nov 2024 12:57 PM IST (Updated: 12 Nov 2024 1:07 PM IST)
t-max-icont-min-icon

அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள முன்னூர் மங்கலம் கிராமத்தில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தரமற்ற கட்டடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

15 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருப்பது ஒட்டுமொத்த கட்டிடத்தின் உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேற்கூரை பெயர்ந்து விழுந்த அசாதாரண சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக குழந்தைகள் யாரும் இல்லாதது நிம்மதியை அளித்தாலும், தமிழகத்தின் பல்வேறு அரசுப்பள்ளிகளில் கட்டப்பட்டிருக்கும் தரமற்ற கட்டிடங்களின் மேற்கூரைகள் தொடர்ந்து பெயர்ந்து விபத்துக்குள்ளாவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தரமற்ற கட்டிடங்களை கட்டிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.


Next Story