தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரிக்கு அண்ணமலை கடிதம்
17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இலங்கை கடற்படையினரால் 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
உங்களது திறமையான மற்றும் பயனுள்ள ராஜதந்திர தலையீட்டின் காரணமாக இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க பல சந்தர்ப்பங்களில் நீங்கள் சரியான நேரத்தில் முயற்சித்ததற்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐயா, 23.12.2024 அன்று மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் துறைமுகம் மண்டபத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் இரண்டு மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையே அவர்களது வாழ்வாதாரம் முழுமையாக நம்பியிருப்பதால் அவர்களது குடும்பங்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைதிகளையும், IND TN 10 MM 206 மற்றும் IND TN 10 MM 543 என்ற பதிவெண் கொண்ட இரண்டு மீன்பிடி படகுகளையும் விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதி செய்ய, வேதனையடைந்த குடும்பத்தினர் உங்களின் நல்ல அலுவலகத்தின் உதவியை நாடி உள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.