15-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை


15-வது ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 13 Feb 2025 2:22 AM (Updated: 13 Feb 2025 6:47 AM)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.08 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019ம் ஆண்டு ஆக.31ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022ம் ஆண்டு ஆக.24ம் தேதி 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் எனவும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான காலம் 4 ஆண்டுகள் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த ஊதிய ஒப்பந்தமும் கடந்த ஆண்டு ஆக.31ம் தேதியுடன் காலாவதியானது.

இதனால் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 14 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.

இதையடுத்து கடந்த ஆக.27ம் தேதி சென்னை குரோம்பேடையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டுநர், மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 85 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த டிச.27, 28 தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அடுத்து பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, "இந்த பேச்சுவார்த்தை 13-ந்தேதி (இன்று) மற்றும் 14-ந்தேதி (நாளை) காலை 11 மணியளவில் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற உள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் நாளில் தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், அடுத்த நாளில் இதர சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்குமாறு பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டுநர் சார்பில் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


Next Story