காவல்துறையை கண்டித்து திடீர் தர்ணா: போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி. சண்முகம் கைது


காவல்துறையை கண்டித்து திடீர் தர்ணா: போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி. சண்முகம் கைது
x

சி.வி. சண்முகத்தின் கைதை தொடர்ந்து போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

அதிமுக எம்பி சி.வி.சண்முகம், கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை தான் கொடுத்த 23 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இன்று பகல் 12.15 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர், இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும், வேண்டுமென்றால் தன்னை கைது செய்து கொள்ளுங்கள் என்றுகூறி தொடர்ந்து போராட்டம் செய்தார்.

இதையடுத்து மதியம் 1 மணியளவில் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதனை கண்டித்து அதிமுகவினர் அந்த வாகனத்தை அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்து வாகனத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மேலும் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி அதிமுகவினர் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே சி.வி.சண்முகம், போலீஸ் வேனில் இருந்து இறங்கி கீழே வந்து நம்மால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று கூறி அதிமுகவினரை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தார். அதன் பிறகு சி.வி சண்முகத்தை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story