நாட்டை காத்தவருக்கு இப்படி ஒரு கொடுமை - அமல்ராஜின் மனைவி வேதனை


நாட்டை காத்தவருக்கு இப்படி ஒரு கொடுமை - அமல்ராஜின் மனைவி வேதனை
x

எல்லை பாதுகாப்புப்படை வீரராக இருந்த என் கணவர் சீமான் வீட்டில் கடமையைதான் செய்தார் என்று அமல்ராஜின் மனைவி கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார். இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது ஆதரவாளர் ஒருவரால் கிழிக்கப்பட்டது. இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் சீமான் வீட்டு காவலாளி உள்ளே விடாமல் தடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கியதாக வீட்டுக் காவலாளி அமல்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். காவலாளி அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர். அவர் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு வீரர் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் தொடர்பாக 2 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவலர் புகார் அளித்த நிலையில், காவலர்களை தாக்கியதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதான அமல்ராஜின் மனைவி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒரு லேடி மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது உள்ளே அனுப்பாமல் என்ன விஷயம் என கேட்டதற்கு அவருடைய சட்டையை பிடித்து இழுத்து சென்று கைது செய்துள்ளார்கள். இதுதான் ஜனநாயகமா? எல்லை பாதுகாப்பு படைவீராக இருந்த என் கணவர் அவருடைய வேலையை தான் செய்துள்ளார். துப்பாக்கியை காட்டி யாரையும் அவர் மிரட்டவில்லை. அவர்கள் தம் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கி கொள்ளுங்கள் என கொடுக்க முயன்றுள்ளார். 25 வருடம் ஆர்மியில் வேலை செய்துவிட்டு வந்தவர். 2018-ல் இருந்து லைசென்ஸ் துப்பாக்கி வைத்திருக்கிறார். நிறைய இடங்களில் வேலை பார்த்துள்ளார். இரண்டு வருடமாக சீமானிடம் வேலை செய்து வருகிறார். எல்லைப் பாதுகாப்பு படை வீரராக இருந்த என் கணவர் கடமையை தான் செய்துள்ளார்.

பாதுகாப்புக்கு இருந்தவரை இப்படித்தான் இழுத்துக்கொண்டு வருவீர்களா? என்ன ஒரு அராஜகம். என் கணவர் துப்பாக்கியை ஒப்படைக்க சென்றதை மாற்றி, மிரட்டியதாகக் கூறுகிறார்கள். கிரிமினல் குற்றவாளி போல இழுத்து சென்றுள்ளார்கள். என் தரப்பில் கண்டிப்பாக புகார் கொடுப்பேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான் அரசுக்கு என்னுடைய கோரிக்கை என்றார்.


Next Story