நெருங்கும் தீபாவளி பண்டிகை: சென்னையில் புறநகர் ரெயில் சேவை நாளை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவைகள் நாளை ( 27-ம் தேதி) ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பொது போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதில் நாள் தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப் படுவது வழக்கம்.
இந்நிலையில் கடற்கரை முதல் எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது வழித்தடம் பணிகள் காரணமாக சென்னையில் புறநகர் ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரெயில் சேவைகள் நாளை (27-ம் தேதி) ரத்து செய்யப் படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை பணிமனையில் நாளை காலை 4 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இயங்கும் அனைத்து புறநகர் ரெயில்கள் இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூா் செல்லும் ரெயில்கள் ஆவடியில் இருந்தும், கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் கொருக்குப் பேட்டையில் இருந்தும் இரு மாா்க்கத்திலும் இயக்கப்படும். கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஒரு சில ரெயில்கள் கடற்கரைக்கு பதிலாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயங்கும்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 3.55 மணி, தாம்பரத்துக்கு காலை 4.15, 4.45 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்னை பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இரு மாா்க்கத்திலும் 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 79 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின் நாளை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரெயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் ஜவுளி கடைகளுக்கு செல்பவர்கள் இந்த ரெயில் சேவை ரத்து காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.