ஓடும் பஸ்சை மறித்து மாணவனுக்கு அரிவாள் வெட்டு - வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல்

படுகாயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பஸ்சில், 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் பயணம் செய்தார். அப்போது திடீரென பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து நிறுத்தியது. 3 பேர் கொண்ட அந்த கும்பல் மாணவரை கீழே இறக்கி, மற்ற பயணிகள் கண் முன்பே சரமாரியாக அரிவாளால் வெட்டினர். மாணவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் கத்தி கூச்சலிட்டு அலறினர். இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவல்படி, "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வார விடுமுறை முடிந்து வழக்கம் போல இன்று பள்ளிக்குச் செல்வதற்காக பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.
அரியநாயகிபுரத்திற்கு அடுத்து கெட்டியம்மாள்புரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ்சை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பஸ் நின்றதும் அதனுள் ஏறிய அந்த கும்பல் தேவேந்திரன் எங்கு இருக்கிறார் என்று தேடியது. பின்னர் தேவேந்திரனை மட்டும் இழுத்து வந்து பஸ்சுக்கு வெளியே கொண்டு வந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து மாணவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைக் கண்ட பஸ்சில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு கதறினர். இதனால், அந்த கும்பலைச் சேர்ந்தோர் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து பயணிகளில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மற்றும் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை சம்வத்தில் ஈடுபட்ட மூவர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக மாணவன் படிக்கும் பள்ளி மற்றும் மாணவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
இதனிடையே இந்த சம்பவத்தில் முன்விரோதம், காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாக நெல்லை சரக டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.