தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்


தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 12 Jan 2025 2:42 PM IST (Updated: 12 Jan 2025 4:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்த மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 12.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் , மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (12.01.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஆழ்ந்த கவலையுடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், 12.01.2025 அன்று, இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால், மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்களது பாரம்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்-அமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story