புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி-பதில் நேரத்தின்போது உறுப்பினர் ராமசந்திரன் கேள்வி: அறந்தாங்கி நகரில் மக்கள் தொகை பெருகி வருவதால் நகரின் எல்லைப் பகுதிகள் விரிவடைவதால் புதிய கூடுதல் காவல் நிலையம் அமைக்கப்படுமா கேள்வி எழுப்பினார்
முதல்-அமைச்சர் பதில்: 1949-ம் ஆண்டு முதல் அறந்தாங்கி காவல் நிலையம் இயங்கி வருகிறது. தற்போது ஒரு காவல் ஆய்வாளர் நான்கு உதவி ஆய்வாளர் 7 தலைமை காவலர்கள், 12 முதுநிலை காவலர்கள், 39 இரண்டாம் நிலை காவலர்கள் என 63 காவலர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அறந்தாங்கி கோட்டத்தை பொருத்தவரை, அறந்தாங்கி காவல் நிலையம், நாகுடு காவல் நிலையம், ஆவுடையார் கோவில் காவல் நிலையம் கரூர் ஆகிய 5 சட்ட ஒழுங்கு காவல் நிலையம், இயங்கி வருகிறது. அது மட்டும் இல்லாமல் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தால், அறந்தாங்கி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அவசியம் எழவில்லை என பதில் அளித்தார்.
உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி: அறந்தாங்கி தொகுதி ஆவுடையார் கோயிலில் இயங்கி வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
முதல்-அமைச்சர் பதில்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு 1.8.2019 இடமாற்றம் செய்யப்பட்டு, இந்த நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டுவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணைப்படி 2 கோடியே 59 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 2026-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும்.
உறுப்பினர் கந்தசாமி கேள்வி: சூலூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா?
முதல்-அமைச்சர் பதில்: சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்ட இடம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட உடன் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உறுப்பினர் கணபதி கேள்வி: அய்யப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா?
முதல்-அமைச்சர் பதில்: 25 கி.மீ தொலைவுக்குள் நான்கு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அய்யப்பாக்கத்தில் தற்போது புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் நிலை எழவில்லை
தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவையில் உள்ள பல உறுப்பினர்கள் காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் வேண்டி கோரிக்கை வைக்கின்றனர். 2021ல் இருந்து, 72 புதிய காவல்நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மாநிலத்தின் நிதிநிலைக்கு ஏற்ப சாத்தியக்கூறுகள் இருக்கும் இடத்தில் புதிய காவல்நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தாக்கல் செய்யும் நேரத்தில் நிச்சயமாக நீங்கள் (உறுப்பினர்கள்) திருப்தி அடையக்கூடிய வகையில் சில அறிவிப்புகளும் வரும். இவ்வாறு அவர் கூறினார்.






