அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி


அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
x
தினத்தந்தி 20 Jan 2025 7:02 AM (Updated: 20 Jan 2025 7:35 AM)
t-max-icont-min-icon

சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெபகர் அலி சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட கலெக்டரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க. அரசு.

ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்திருந்தார்.


Next Story