தீபாவளியை ஒட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனை


தீபாவளியை ஒட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனை
x

கோப்புப்படம்

தீபாவளியையொட்டி 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு அமுதம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் நியாய விலை கடைகளை போலவே அமுதம் பல்பொருள் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை தமிழக அரசு நடத்தி வருகிறது. சுய சேவை சேவைமுறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன. இதில் பருப்பு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான மளிகை பொருட்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் தீபாவளியை ஒட்டி 15 மளிகை பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு, தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு நுகர்வோர் வாணிகம் மூலமாக இந்த 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணா நகர் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி உள்ளிட்ட 10 அமுதம் நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை நடக்கும். தீபாவளிக்கு தங்கு தடை இன்றி நியாய விலை கடைகளில் பொருட்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன. பொருட்கள் இல்லை என்ற நிலை எங்கும் இல்லை" என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.


Next Story