தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது


தடையை மீறி போராட்டம் நடத்த  முயன்ற சவுமியா அன்புமணி கைது
x
தினத்தந்தி 2 Jan 2025 11:07 AM IST (Updated: 2 Jan 2025 11:20 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பா.ம.க. சார்பாக இன்று சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பா.ம.க.வின் மகளிர் அணி சார்பில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த சூழலில் காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முன்னதாக வள்ளுவர்கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த பா.ம.க. மகளிரணி திட்டமிட்டிருந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைக்காக பஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


Next Story