தமிழ் மொழியில் கையெழுத்திடுங்கள்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராமேசுவரம்,
தமிழகத்தின் ராமேசுவரத்தில் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து, ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டதுடன், வாகன பேரணியும் நடத்தினார். அப்போது, பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் அவருக்கு சாலையோரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பியதுடன், வரவேற்பும் தெரிவித்தனர். அவருடைய வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அவர் பேசும்போது, இன்று ராம நவமி நாள். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு, சூரியனின் கதிர்கள் ஒன்றாக சேர்ந்து சூரிய திலகம் வைத்துள்ளன.
சமயநெறி சார்ந்த ராமேசுவரம் நிலத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கும். தமிழகத்தில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது. கையெழுத்தேனும் தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று அவர் கேட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், நூறாண்டுக்கு முன்பு பாம்பன் பால கட்டுமான பணியில் ஈடுபட்டவர் ஒரு குஜராத்தி. புதிய பாம்பன் பாலத்தினை ஒரு குஜராத்தியாகிய நான்தான் திறந்து வைத்திருக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.